×

வற்றாத வளமருள்வார் வழூர் வள்ளல் தங்கக்கை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

அந்த அழகான ஊருக்கு வழூர் என்று பெயர். உத்திரமேரூர் தாண்டி வந்தவாசி பாதையின் நடுவே பிரிகின்ற பாதையில் சற்று தூரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கிராமம். ரம்மியமான ஊருக்குள் நுழையும்போதே மிகப் பெரிய குளமும், அதையொட்டிய பெருமாள் கோயிலும்,  ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் மணிமண்டபமும் நம்மை வரவேற்கின்றன. குளிர் கலந்த காற்று நம்மைத் தாலாட்டுகிறது. குளிர் காற்றோடு இணைந்த  ஸ்ரீ   சுவாமிகளின் அருட்காற்று நம் இதயத்தை நிரப்புகிறது. ஆம், இந்த அழகிய புண்ணிய கிராமத்தில்தான் திருவண்ணாமலையில் அருட்கோலோச்சி ஆட்சி செய்யும்  ஸ்ரீ  சேஷாத்ரி சுவாமிகள் அவதாரம் செய்தார்.

ஆன்மிக வாழ்வில் பயணிக்கும் ஒவ்வொருவரும் அதி முக்கிய விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எப்படி ஞானியரின் ஜீவசமாதிகள் முக்கியமானதோ, அந்த ஜீவசமாதிக்குள்ளிருந்து தங்களின் ஞான வேள்வியை தொடருகின்றனரோ, அதுபோல ஞானிகளின் அவதாரத் தலமும் முக்கியமானதாகும். அகிலாண்ட பிரமாண்ட கோடியான இந்த பிரபஞ்சத்தில் ஏன், இப்படியொரு தலத்தில் ஒரு ஞானி உதிக்க வேண்டும். அப்படிப்பட்ட புனித பூமிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது போன்ற விஷயங்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.தமிழில் கைவல்ய நவநீதம் என்கிற மிகவும் உயர்வான வேதாந்த நூலொன்று உண்டு. காலந்தோறும் பல்வேறு ஞானியரால் படிக்கப்பட்டும் முக்கிய நூலாக பரிந்துரை செய்யப்படும் நூல் அது. அதை இயற்றியவர் நன்னிலம்  ஸ்ரீ  தாண்டவராய சுவாமிகள்.அதில்நன்னிலம் என்பதற்கு மிக அற்புதமான ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, நிலம் என்பது நம் பார்வையில் மண், மேடு, மரம், கட்டிடம், மனிதர், ஜீவராசிகள் என்பவைதாம். ஆனால், நிலம் என்பது உங்களின் ஞானம் பொங்கும் உயர்ந்த பூமியே ஆகும்.

அப்படிப்பட்ட நன்னிலம் என்பது ஞானம் பொங்கும் துரீயம் என்பதான பொருளில் நன்னிலம் என்று அழைக்கப்பட்டிருந்தது. ஏனெனில், அந்த நன்னிலத்தில்தான் தாண்டவராய சுவாமிகள் வாழ்ந்தார். அதுபோலவே இந்த வழூரும் மகான்  ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அவதரித்ததாலேயே உள்ளுறைய ஆன்மிக ஞானம் பொங்கும் பூமியாக, இன்னொரு நன்னிலமாக விளங்குகின்றது. அதை அங்கு சென்று அமர்ந்து பார்த்தால்தான் தெரியும். காமகோடியார் வம்சம் எனப்படும் தொன்மையான பரம்பரையில் 1870ம் வருடம், ஜனவரி 22ம் தேதி, தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவரின் அவதாரமே ஆச்சரியங்கள் நிறைந்தது. ஏனெனில், இவரது பெற்றோரான வரதராஜர், மரகதம் புண்ணிய தம்பதிக்கு திருமணமாகி பல வருடங்கள் மழலைப் பேறு இல்லை. இவர்கள் இருவரும் ராமேஸ்வரம் உள்ளிட்ட சகல புண்ணிய தலங்களுக்கும் சென்று வந்தனர். மிகுந்த நியமத்துடன் மங்கள சஷ்டி, மங்கள குமார விரதத்தை அனுஷ்டித்தனர். ஆனாலும், குழந்தைப் பேறு இல்லை. ஒருநாள்  ஸ்ரீ  காமகோடி சாஸ்திரி அவர்களை அணுகி, ‘‘இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவில்லையே’’ என்று மரகதம் அம்மையார் அழுதார். காமகோடியார் ‘கவலைப்படாதே’என்று அவர்களின் குலதேவியான காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை நோக்கி வேண்டினார். அன்றிரவே அம்பாள் கனவில் வந்தாள். ‘‘நவநீதம் கொடு ஞானக்கலை உதிக்கும்’’ என்று அருளாணையிட்டாள்.

காமாட்சியின் பேரருளால் மரகதம், வரத
ராஜர் தம்பதிக்கு  ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பிறந்தார். ஒருமுறை தாயாரோடு காஞ்சிக் கோயில் உற்சவத்திற்காக வெளியே சென்றபோது, அங்கு கிருஷ்ணருடைய பொம்மைகளை விற்கும் வியாபாரி இந்தக் குழந்தையை கண்டார். குழந்தையும் கைநீட்டி அந்த விக்கிரகம் வேண்டுமென கையை நீட்டியது. நீட்டிய திருக்கரத்தில், அந்த வியாபாரி தன்னிடமிருந்த நூற்றுக் கணக்கான பொம்மையில் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அவ்வளவுதான். மறுநாள் அந்த வியாபாரி இவர்களை தேடிக்கொண்டு வந்து விட்டார். ‘‘அம்மா… அம்மா... இது சாதாரண குழந்தையல்ல. நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்கிறீர்கள். குழந்தையின் கை பட்டவுடன் நேற்று ஒரே நாளில் என்னுடைய அனைத்து பொம்மைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அம்மா… இந்தக் கை சாதாரண கையல்ல…. தங்கக்கை… தங்கக்கை…’’ என்று கண்களில் ஒற்றிக்கொண்டார்.அன்றிலிருந்து தங்கக்கை சேஷாத்ரி என்றே அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். மிகச் சிறிய வயதிலேயே வேத ஞானம் பெற்றவராக இருந்தார். சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்களிடத்தில் வாத, பிரதிவாதம் செய்யும் திறன் பெற்றிருந்தார். ஆனால், திருவருணை ஈசனோ தன்னோடு இணைத்துக்கொள்ள சங்கல்பித்துவிட்டது. சேஷாத்ரி சுவாமிகளின் பணி வேறானது என்பதை அவரின் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள் தீர்மானித்தன.  திடீரென்று ஒருநாள் அவரது தந்தையார் வரதராஜர் மரகதம் அம்மையாரையும், தம் குழந்தையும் அருகில் அழைத்தார்.

‘‘ ஸ்ரீ  காமாட்சியின் அருளால் நீ எனக்கு மனைவியாக வந்தமர்ந்தாய். நம்முடைய குழந்தைகளில் சேஷாத்ரி மிக விசேஷமாக விளங்கப் போகிறான். நீயும் இன்னும் சிறிது காலம் சேஷாத்ரியின் பெருமையின் கீழ் இருந்துவிட்டு புறப்பட்டு விடுவாய். உனக்கும் கண்டிப்பாக கைவல்யம் உண்டு. நான் நாளை மரணித்து விடுவேன்’’ என்று சொல்லிவிட்டு மறுநாளே  இறைவனோடு கலந்தார். சேஷாத்ரிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அடுத்தடுத்த சில காலங்களில் தாயாருக்கும் உலகப்பற்று முற்றிலும் விடுபட்டுவிட்டது. அவரும், தன்னுடைய சரீரத்தை விட்டு புறப்படும்போது அருணாசல சிவ… அருணாசலசிவ… ஸ்மரணாத் அருணாசலம்… என்று சொல்லியபடியே உயிர் நீத்தார். ஸ்ரீ  சேஷாத்ரி சுவாமிகள் அதுமுதல் தம்முள்ளத்தில் அக்னி போன்றிருந்த ஞானத் தணலை பெருக்கப் பண்ணினார். மயானத்தில் பூஜை செய்தார். தன்னை அறிந்தார். தானே எல்லாமுமாக இருப்பதை உணர்ந்தார். எல்லோரும் இவரை சில சமயம் பைத்தியம் என்றும் நினைத்தனர். ஆனால், இவரோ உள்ளுக்குள் சிவப்பித்து பிடித்தலைந்தார். மெதுவாக எல்லா ஊர்களையும் சுற்றியபடியே திருவண்ணாமலையை அடைந்தார்.

மெல்ல  ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஞானக் கனல் எல்லோரையும் அணைந்தது. இவர் பார்க்கத்தான் பித்துப் பிடித்தவர். இவர் அலையும்போது பேயராய் இருக்கிறார். தனக்குள் சிரித்துக் கொண்டு பாலராய் விளங்குகின்றார். ஆனால்,  ஸ்ரீ சேஷாத்ரி தனக்குள் தானாக நின்று ஜொலிக்கும் பிரம்மம் என்று பலரும் வந்து வணங்கினர். தன் கடைக்கு வந்து பொருட்களை சுவாமிகள் இறைக்க மாட்டாரா என்று வியாபாரிகள் ஏங்கினர். இவரை தரிசிக்க மாட்டோமா என்று வெளியூர்களிலிருந்து பக்தர்கள் தேடித்தேடி கண்டுபிடித்து தரிசித்தனர். நூற்றுக்கணக்கான லீலைகளை அசாதாரணமாக நிகழ்த்தினார்.

 ஸ்ரீ   சேஷாத்ரி சுவாமிகள் இந்த உலகத்திற்கு இன்னொரு பிரம்மம் வந்திருப்பதையும் கண்டுபிடித்துக் காட்டியது.திருவண்ணாமலை பாதாள லிங்கத்தினடியில் உடல் முழுவதும் மண் அரித்து ஞானத் தபோதனராய் அமர்ந்திருந்த  ஸ்ரீ  ரமண மகரிஷியை இது பெரிய வைரம்… பெரிய வைரம் என்று மெல்ல வெளியே கொண்டுவந்து இதைப் பிடித்துக்கொள்ளுங்கள். இதைச் சரணடையுங்கள். இது பரபிரம்மம்… பரபிரம்மம்… என்று உலகிற்கு முதன்முதலில் அறிவித்தார். அன்றுமுதல்  ஸ்ரீ  சேஷாத்ரி சுவாமிகளும்,  ஸ்ரீ  ரமண மகரிஷிகளும் சகோதரஞானியராக விளங்கினர்.
 
ஸ்ரீ  சேஷாத்ரி சுவாமிகள் 4: 1 : 1929ம் வருடம் வெள்ளிக் கிழமையன்று விதேக கைவல்யம் எனும் தன்னுடைய தேகத்தை விட்டார். அவருடைய ஜீவசமாதி பிரதிஷ்டையின்போது  ஸ்ரீ ரமண பகவான் அருகேயே இருந்து எப்படி செய்யப்பட வேண்டுமென வழிகாட்டினார். இன்றும் திருவண்ணாமலையில் செங்கம் சாலையில்  ஸ்ரீ  ரமணாஸ்ரமத்திற்கு அருகிலேயே இவரது ஜீவசமாதி அதிஷ்டானம் அமைந்துள்ளது. சூட்சுமமாக அவரின் அருள் வெளிப்பட்டு பக்தர்களின் இதயத்தை நிறைக்கின்றது.இப்படிப்பட்ட பெரும் ஞானியின் அவதாரத் தலமான வழூரில் அவர் அவதரித்த இல்லத்தை அவர் தாயார் மரகதம் அம்மையார் பூஜித்த துளசி மாடத்தை அப்படியே வைத்து வழூரில் மணிமண்டபம் அமைத்திருக்கிறார்கள். இந்த அற்புதமான பணியை அவரது பக்தர்கள் ஒருங்கிணைந்து செய்து முடித்திருக்கிறார்கள். இது அவர் அவதரித்த அகமா அல்லது ஆலயமா என்று பிரமிக்கும் அளவுக்கு
பிரமாண்டமாக கட்டியிருக்கிறார்கள். பெரும் மண்டபத்தின் நடுவே  ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் திவ்ய மங்கள திருமேனிச் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சர்வ வியாபியான சுவாமிகளின் திருமுகம் மலர்ந்து பேரருள் பொங்க வீற்றிருக்கின்றார். அந்தத் திருமுக மண்டலத்தின் நடுவே மெல்லிய புன்னகையில் நம் துக்கங்களை சிதறடிக்கிறார். அந்தச் சந்நதியில் நம் அகம் குழைகின்றது. மனம் விண்டு போகிறது. இப்பேற்பட்ட ஞானியின் முன்பு நானெல்லாம் ஒன்றுமில்லை என்று அகங்காரம் ஓடி ஒளிகின்றது. அந்தத் திருமேனியிலிருந்து பரவும் அதிர்வலைகள் நம்முள்ளும் ஊடுருவி நம்மை மெய்யுணர்வே அற்றவராகவும் செய்கின்றது. ஆஹா… ஞானியரின் அவதாரத் தலத்தை ஏன் எல்லா மகான்களும் ஏற்றம் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள் என்பதை அங்கு சென்று வந்த பின்னர், அனுபவப்பூர்வமாகத்தான் உணர முடியும்.

எல்லா மாதங்களிலும் வரும் ஹஸ்தம் நட்சத்திரத்தன்று, அதாவது சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரத்தன்று சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. எப்போதெல்லாம் உங்களுக்கு நேரமும் விடுமுறையும் அமைகின்றதோ அப்போதெல்லாம் வப்வூருக்குச் சென்று சுவாமிகளின் சந்நதியில் அமர்ந்து விட்டு வாருங்கள். உங்களை காலியாக்கிவிட்டு வெறும் பாத்திரமாக்கி அங்கு சென்று அமருங்கள். அந்த சேஷாத்ரி பிரம்மம் உங்களை நிறைக்கும். நிறைந்து தளும்பி எதுவொன்று அமர்ந்ததோ அது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் வழிகாட்டியபடியே வந்தபடி இருக்கும். இது அங்கு சென்று அமர்ந்து அனுபவித்து உணர்ந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மை. இந்த புண்ணிய பூமிக்கு மிக அருகிலேயே கூப்பிடு தொலைவில் மருதாடு எனும் கிராமத்தில் இவரின் முன்னோடி மகஞானியான கோடி சுவாமிகளின் ஜீவசமாதி வாழைத் தோப்புக்கு நடுவில் அமைந்துள்ளது. அதையும் சென்று தரிசித்து வாருங்கள். வழூர் எனும் இத்தலம் உத்திரமேரூர் தாண்டி வந்தவாசி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

Tags : Perennial Valamarulvar ,Vallal Thangakai ,Sri Seshatri ,Swami ,
× RELATED வற்றாத வளமருள்வார் வழுவூர் வள்ளல் தங்கக்கை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்